Tuesday, June 6, 2017

நீர்க்கோலம்

 
 
அன்புள்ள எழுத்தாளருக்கு...

நீர்க்கோலம் என்ற சொல்லை முதலில் கண்டதும் மனதில் உதித்தது, ’நீர்க்கோல வாழ்வை நச்சி’ என்பது தான். அது கம்பனின் சொல் என்பது தெரியாது. வைரப் பாறையின் அத்தனை முகங்களும் ஜொலிக்கும் என்றாலும் கூர் முனைகளில் திகழும் நுண்ணொளி போல் இராமகாவியத்தில் ஒரு மின்னொளி இச்சொற்றொடர். 

நீர்க்கோலம் என்ற சொல்லை மீண்டும் மீண்டும் வகுத்துப் பார்க்கையில் பல வண்ணங்கள், பல எண்ணங்கள்.

நீரில் போடும் கோலம். எதனால்? ஒளியால் என்பது ஒன்று. நீங்கள் சொன்னது.

நீரில் தோன்றும் பிம்பம் என்பது நிலையானது அல்ல. அது ஓடும் நீரானால் கலையும். அசையா நீரானாலும் காற்றால் கலங்கும். (கலங்கிய நதி!)

நாம் வழக்கமாகக் கொள்ளும் கோலப்பொடி கொண்டு இடும் கோலமானாலும் அது நீரில் மறைந்து விடுவதே! ஆனால் முற்றுமல்ல. அப்பொடி நீரிலேயே கலந்து விடுகின்றது. நீர்ப்போக்கைக் காலம் எனக்க்கொண்டால், நம் செயல்களால் நாம் அமைத்துக் கொள்ளும் கோலம் இறக்கையில் மறைந்து விடும் என்றாலும், தடமின்றிப் போய் விடும் என்றாலும் அது காலத்தில் கரைந்து விடுகின்றது. வர்ணப்பொடி என்றால், கலவைநிறங்களால் ஓடும் காலத்தில் நம் வாழ்வெழுதிச் செல்கிறோம்.

நீர்மேல் விரல்களால் எழுதும் கோலம் என்றால், அது கணப்பொழுதும் நில்லாது. ஆனால் அவ்வடிவம் எழுதியவரின் விரல்களில், கண்களில், நெஞ்சத்தில் நிரந்தரமாகின்றது. தலைமுறைகளுக்குச் சொல்லப்படுகின்றது. கேட்பவரின் கனவுகளில் அக்கோலங்கள் மீண்டும் மீண்டும் எழுகின்றன.

நீர்க்கோலம் என்பதை இன்றைய நீர்வர்ண ஓவியம் என்று கொண்டால், அதை எழுதியவன் அது நிலை பெற்றது என்று நம்புகிறான். வேறொரு நீரலை வந்து அறைகையில் ஓவியம் தீட்டப்பட்ட காகிதமோ துணியோ இருக்கத்தான் செய்கின்றது , ஆனால் அவ்வோயியம் தன்னிலை மாறுகின்றது.  வரைந்தவன் இல்லான். பார்ப்பவர்கள் பிறந்திறந்து கொண்டிருப்பார்கள். ஓவியம் அங்கேயே தான் நின்றிருக்கும். சிலரது ஓவியங்கள் மட்டும் அந்நல்லூழ் கொண்டு காலச்சுவற்றில் தொங்குகின்றன.

நன்றிகள்.

அன்புடன்,
இரா.வசந்தகுமார்.