Monday, June 19, 2017

காதலின் அற்புதம்




அன்புள்ள ஜெ வணக்கம்.

காதலின் அற்புதமே உள்ளம் வெளிப்படுவதும், அதை மறைப்பதும்தான். சிலர் உள்ளம்வெளிப்படும் விதத்தில் காதலை அறிவிக்கின்றார்கள் மற்றும் அறிகின்றார்கள்  சிலர் உள்ளத்தை மறைப்பதன் மூலம் காதலை அறிகின்றார்கள் மற்றும் அறிவிக்கின்றார்கள். 

நளனுக்கு உள்ளம் வெளிப்படுகின்றது அதன் மூலம் அவன் தன் காதலை அறிவிக்கின்றான் மற்றும் தன்னுள் அறிந்தும் நிறைகின்றான். அவன் இந்திரன்சிலை நிருவுவதன் மூலம் உலகுக்கு அறிவிக்கின்றான். பெற்றவரை குடியை குலத்தை தாண்டி கலிசிலையை அகற்றுவதன் மூலம் அது நடக்காத பட்சத்தில் நாடு துறந்து காடேகுவது என்பதன் மூலம் தனக்கே தனன்  உள்ளத்தை அறிந்துக்காட்டுகின்றான்.   

தமயந்தி கேளாதவள்போல நோக்காதவள்போல உணராதவல்போல நுகராதவல்போல பேசாதவல்போல தனது உள்ளததை மறைக்கின்றாள். இந்த உள்ளம் மறைத்தலே அவளுக்குள் காதல் உள்ளது என்பதை அவளுக்கும் உலகுக்கும் நிருப்பிக்கின்றது. எங்கோ ஆழத்தில் இருந்து எழுந்து வருவதுபோல அவள் நளன் முகத்தை ஒவியத்தில் இருந்துப்பார்த்து பார்த்து தனது ஆழத்தில் உள்ளது அதுதான் என்பதை அறிகின்றாள். ஆனால் அவள் உள் உள்ளது அவன் முகம்தான் அதை திரும்பிப்பார்ப்பதன் மூலமாக அறிகின்றாள். இதுவரை அவள் எத்தனையோ முகங்களை பார்த்திருப்பால் எதுவும் அவளுக்குள் இல்லை இவன் முகம்தான் உள்ளது. 

நளன் இந்தபெண் அல்ல இந்த பெண்ணல்ல என்று தயமந்தி ஓவியம் காணும் முன்பும் கண்டபின்பும் கூறுவதுபோலத்தான், தமயந்தியும் இவன் இல்ல இவனல்ல என்று கூறுகின்றாள். ஆணோ பெண்ணோ தனக்கு உரியவர்களை தனது புலன்களின் வழியாக கண்டு அடைவதில்லை, புலன்களை தாண்டி,மன உணர்வுகளைத்தாண்டி உள்ளம் உறையும் மெய்மை பீறிடுவதுபோல காதலும் பீறிடுகின்றது.. அது ஒரு தன்னுணர்வு அழிந்த நிலையில் வெளிவருகின்றது. புலன்களை மனதைத்தாண்டி சென்று அதை யாரும் அறிந்துக்கொள்ளமுடியவில்லை. நளன் தமயந்தி இடையில் மலரும் இந்த காதலை படைக்கும்விதத்தில் புலன்களின்  அல்லாடலையும் மனதின் மருட்சியையும், அகங்காரத்தின் விழிப்பையும் காட்டுகின்றீர்கள். அதற்கு அப்பால் காதல் சத்தமே இல்லாமல் மலர்வதும் தெரிகின்றது.

தனது அன்னங்கள் உடன் சேர்ந்து இருக்கும் கணங்களை விலக்கிய தமயந்தி, புதிதாக வந்த அன்னத்திடம் அதை கண்டகணத்தில் முழந்தாள்இடுவது காதல் பூக்கும் பொன் தருணம். ஓவியர் ஷண்முகவேல் அந்த இடத்தில் தனது தூரிகையை நிருத்தி இருப்பது காதலின் உயிர்ப்பு.

மீன்தான் என்றாலும் கற்சிலையாக இருக்கும்வரை கடல் அலை மோதல் எல்லாம் மீனுக்கு வலிதான். மீன் உயிர்பெறும்போது அலையின் ஆடல்கள் எல்லாம் மீனின் நடனமேடை . மீனின் ஆனந்தநடனம் எல்லாம் அலையின் மோனசுகம். .

தமயந்தி கல்லாக இருக்கும்வரை அலையலையாக எழுந்துவரும் நளனின் காதலை இடிசுமையாக நினைக்கிறாள். அவள் உள்ளம் உயிர்பெறும்போது அவளே அந்த பிரேமானந்த சாகரத்தில்  விழுகிறாள்.

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.