Saturday, October 21, 2017

மாமலரில்



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

விரைந்து எழும் தழலுக்கு நடுவே தற்செயலாய் தாவிச் சென்று மாமலர் தேடிச் செல்லும் பீமனும், அவன் துணை செல்லும் முண்டனும் சென்று கொண்டிருந்த அடர் கானகத்தை அடைந்தேன்.  நீர் சொட்டிக்கொண்டிருக்கும் இலைகள், பாசி படர்ந்த சிற்றாலயம்.  "ஆமாம் இவருக்கு ஒட்டு மொத்த பாரதமும் கேரளாவில் நடப்பதாக வேண்டும், அல்லது ஒட்டுமொத்த இந்தியாவும் கேரளா போல் வேண்டும்.  யாதவ நிலம் கூட வாகமண் புல்வெளி போல இருக்க வேண்டும்" என்று எண்ணிக்கொண்டேன்.  நல்லது தானே ஆனால் இன்றைய கேரளம் போல் இருக்கக் கூடாது, பல நூற்றாண்டுகள் முன்பிருந்த இன்னும் மிக அடர்ந்த கேரளமாக இருக்க வேண்டும்.  பதினைந்து ஆண்டுகள் முன்பு வளையார் பாலம் நின்று இயற்கையே வகுத்தது போன்ற எல்லை காண்பது வியப்பூட்டுவது.  இந்த பக்கம் குறைந்த மரங்கள் கொண்ட நிலம் அந்த பக்கம் உடனடியாகத் துவங்கும் பச்சை பெருமரங்கள் அடர் செறிவு, சத்தமிட்டு தங்கள் இருப்பைச் சொல்லும் சிற்றுயிர்களின் ஒலிகள்.  இன்று இரண்டு பக்கத்திற்கும் வித்தியாசமே இல்லை.  பாலக்காடு வரை சாலை அகலம் செய்யப்பட இரண்டும் ஒன்று போலவே இருக்கிறது.

மாமலரின் அத்தியாங்களில் ஓடிய போது உயிரோட்டம் மிகுந்திருப்பது எனத் தோன்றியது.  தரையில் மெலிதான ஒரு சிறு வெட்டு பாதாள கங்கையை மேலே கொண்டு வரக்கூடும், விழியின் ஒரு நோக்கு விண்மீன்கள் திரளை திசை திருப்பி ஒருங்கு திரட்டி பூமிக்கு கொண்டு வரக்கூடும், சக்தி வழிபாட்டின் தன்மை - அது தரும் உயிரோட்டம்.  சக்தி வழிபாட்டையும் கலைஞர்களின் உச்சங்களையும் ஒருங்கு நோக்குகிறேன்.  எண்பதுகளில் மூகாம்பிகை பகத்தரான இசைஞானி இளையராஜா அவர்களின் இசையின் உயிரோட்டத்தை எண்ணுகிறேன்.  முன்பு தமிழ் சைனிக் சமாசார் இதழில் ஒவ்வொரு ரெஜிமெண்ட்க்கும் போரின் போது தரப்படும் வீராவேசம் உண்டாக்கும் கோஷங்கள் பற்றியும் அதன் உளவியல் பற்றியும் ஒரு கட்டுரை படித்தேன்.  முஸ்லிம்களுக்கு "அல்லாஹு அக்பர்."  இந்துக்களில் வெவ்வேறு ரெஜிமெண்ட்களுக்கும் வெவ்வேறு "ஜெய் பவானி" அல்லது "ஜெய் காளி" அல்லது "ஜெய் ஸ்ரீராம்" அல்லது "ஹர ஹர மஹாதேவ்."  அதில் குறிப்பிடப்பட்டிருந்தது "ஜெய் பவானி" அல்லது "ஜெய் காளி" என்று கொண்டவர்கள் உச்சபச்ச ஆவேசத்துடன் ஆக்ரோஷமாக போரிட்டனர், "ஹர ஹர மஹாதேவ்" கொண்டவர்களிடம் ஆவேசம் மிக குறைவாகவே இருந்தது என்று.

நவராத்திரியின் சமயம் என்பதால் மாமலர் வழியாக பீமன் முண்டன் துணையுடன் மூதன்னைர் ஆலயங்கள் சென்று வந்தேன்.  மாமங்கலை அன்னையின் அருள் அனைவர்க்கும் நிலவுக.


அன்புடன்
விக்ரம்