Sunday, October 15, 2017

மீண்டும் நீலம்



பெருமதிப்பிற்குரிய ஜெமோ. அவர்களுக்கு,

வணக்கம்.

இன்றைய "விஜயதசமி" நாள் நன்றாகவே விடிந்திருக்கிறது!.ஆம் இன்று "நீலம்" மறுபடியும் பூத்திருக்கிறது!.திருமதி.எம்.எஸ்.அன்று பாடியதை -பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ- சற்று மாற்றி பாடத்தோன்றுகிறது!.கிருஷ்ணனின் பேரன் அநிருத்தனை கண்ணனாகவே கண்டு மீண்டும் ஒருமுறை  நீலத்தை மலரச்செய்துவிட்டீர்கள்!.இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.நீலம் என்றவுடனே உங்கள் எழுத்துக்களில் விளக்கமுடியாத  உன்மத்தம்தோன்றுவிடுகிறது!.எதை சொல்ல எதை விட என்றே தெரியவில்லை.நீங்கள் வரிசையாக தொடுத்திருக்கும் பெண்களின் பெயரை சொல்லவா?அல்லது உங்கள் கைவண்ணத்தில் வார்த்தைகள் ஜொலிப்பதை கூறவா? .. 
“இங்கு அவர் இல்லாத இடமே இல்லை. இங்கு அவர் மீண்டும் மீண்டும் வந்துகொண்டே இருப்பார். புல்லென வெளித்தெரிவது மண்ணின் கனிவுதான்எத்தனை உண்டாலும் அது முளைத்தெழுமென பசுக்கள் அறியும்.”
“மூடா, இப்போதுதான் உலகமே இனிமைகொண்டு கனிந்துள்ளது” என்றாள் யசோதை. “இன்றுபோல உன் மூதாதையிடம் நான் விளையாடவே இல்லை, தெரியுமா? ஒன்று நோக்குகையில் நூறு செய்யும் பிள்ளையை எண்ணி ஒருநாளும் மெய்மறந்து துயின்றதில்லை… 
இன்று தளர்ந்த முதுமையில் பெண்ணென்று அவள் கொண்ட உளச்சுருக்கங்கள் அனைத்தும் விலக அன்னையென்று மட்டுமே ஆகி நின்றிருக்கையில் எந்த்த தடையுமிலாது அவனை நோக்க முடிந்தது.
மொத்தத்தில் உங்கள் எழுத்தால் எங்களை "பிச்சி" ஆக்கிவிட்டீர்கள்! என்றால் அது மிகையில்லை.இறுதியாக ஓன்று சொல்லத்தோன்றுகிறது "மஹாபாரதம்", வெண்முரசாக  தீந்தமிழில் உங்களால் விரித்தெழுத இவ்வளவுநாள் காத்திருந்தது போலும்!.

அன்புடன்,
அ .சேஷகிரி.