Wednesday, November 8, 2017

அபிமன்யூவின் பரிணாமம்



ஜெ

அபிமன்யூவின் பரிணாமம் முழுமையாக இப்போதுதான் தெரிகிறது. நான் நீங்கள் அவனை ஆரம்பத்தில் காட்டியபடி எதைப்பற்றியும் கவலைப்படாமல் எல்லாவற்றுக்குள்ளும் நுழைபவன், வெளிவருவதைப்பற்றி கவலைப்படாத துடுக்குக்காரன் என்றுதான் நினைத்தேன். கடைசியில் அவன் பத்மவியூகத்திற்குள் நுழைந்து இறக்கிறான். அது மகாபாரதத்தின் கதை முடிவு. அந்த முடிவை வாசகனிடம் நினைவூட்டுகிறீர்கள். அவன் உள்ளே வந்தபோதே அந்த கட்டுப்பாடற்ற வேகத்தையும் பத்மவியூகத்தையும் சொல்லிவிட்டீர்கள். அந்த நினைவூட்டல் ஏன் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். வெண்முரசில் அத்தனை கதாபாத்திரங்களுக்கும் அவர்களின் முடிவு முன்னரே தெரிந்திருக்கிறது. அது ஒரு கிளாஸிக் எலெமெண்ட். அபிமன்யூவுக்கும் தெரிகிறது என நினைத்தேன்.

ஆனால் கதை வளர வளர அவன் கதாபாத்திரமும் வளர்ந்தபடியே சென்றது. அவன் விளையாட்டுப்பையன், பொறுப்பற்றவன் என முதலில் தெரிந்தான். ஆனால் ருத்லெஸ் என்று பின்னர் தெரிந்தது. எதையும் செய்பவன் என்று காட்டியது போர். பாணனுடன் உரையாடும்போது கண்ணன் மேல் அவன் கொண்டிருக்கும் சமரசமற்ற பக்தி தெரிந்தது. மேலும் விரிந்து அவனுடைய வேதாந்த ஞானம் தெரிந்தது. கண்ணனின் ஞானக்கொடையை அவன் அப்பா தெரிந்திருப்பதை விட தெரிந்தவன் அவன். ஏனென்றால் கருவிலேயே ஞானம் கிடைக்கப்பெற்றவன். கண்ணனால் ஆட்கொள்ளப்பட்டவன். கண்ணனே குருதிவாசனை பெற்று அணுகிவந்த இரை. கண்ணன் காலடியில் சரணாகதி அடைகிறான். அதன் உச்சமாக முக்காலமும் உணர்ந்து கனிந்துவிடுகிறான். கடைசியில் வரும் அபிமன்யூ முற்றிலும் வேறு. அவன் பத்மவியூகத்தில் நுழையும்போது மட்டுமீறி உள்ளே செல்லக்கூடியவன் அல்ல. அவன் என்ன நடக்கும் என தெரிந்து புன்னகையுடன் ஆழ்ந்த அமைதியுடன் உள்ளே நுழைபவன். ஞானி. ஜீவன் முக்தன்

இதற்காகவே ஆரம்பத்தில் பத்மவியூகத்தை நினைவூட்டினீர்கள். நாம் எல்லாரும் அறிந்த அபிமன்யூ பத்மவியூகத்தில் துணிச்சலாக உயிர்துறப்பவன். சரியாகச் சொன்னால் நாவலில் அவன் கதாபாத்திரத்தை அங்கே கொண்டுசென்று முடிக்கவேண்டும். ஆனால் நாவலில் அவன் கதாபாத்திரம் அங்கே தொடங்குகிறது. மேலே சென்று பலபடிகளக வளர்ந்து இப்போதுள்ள மெய்ஞானியின் இடத்தை, கர்மயோகியின் அடையாளத்தை அடைந்துள்ளது. இந்தமாற்றத்தையே நாவல் சொல்கிறது. நீ அறிந்ததுபோல அவன் கண்மண் தெரியாமல் உள்ளே போய் செத்துப்போன ஒருத்தன் அல்ல. அவன் கண்ணனால் ஆட்கொள்ளப்பட்டு பிறந்தவன். கண்ணனின் பணிக்காக தன்னை உவந்து கொடுத்தவன். ஆகவே நீ அறிந்ததை முதலில் சொல்லி மேலே கொண்டுசெல்கிறேன் உடன் வா என நாவல் சொல்லியிருக்கிறது. இதைப்புரிந்துகொள்ள முடிகிறது

மனோகரன்