Tuesday, November 7, 2017

வாரணவதம்



பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,

வணக்கம்.

02.11.17 தேதியிட்ட'Times Of India ' நாளிதழில் பின் வரும் செய்தி வந்துள்ளதை அறிவீர்கள் என நினைக்கிறேன்.

வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி துறை நிபுணர்களின் பல ஆண்டு வேண்டுகோளுக்குப் பிறகு  'இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறை' மஹாபாரதத்தில் குறிப்பிடப்படும் முக்கிய சம்பவமான-தீயூட்டப்பட்ட அரக்கு மாளிகையில் இருந்து தப்பிக்க பாண்டவர்கள் பயன்படுத்திய மண் சுரங்கத்தை அகழாய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளார்கள் என்று.மேலும் இந்தப்  பகுதி  உ .பி. மாநிலத்தில் உள்ள 'பாக்பட்' மாவட்டத்தில் உள்ள 'பர்ணவா' (மஹாபாரதத்தில் குறிப்பிடப்படும் வாரணவதத்தின் மருவிய பெயர் என்று கருதுகிறார்கள்) .இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறை இயக்குனர் Dr.SK. Manjul அவர்கள் இந்த அகழாய்வை பற்றி கூறும்போது இப்போதைக்கு மத சம்பந்தமாக எதுவும் கூறமுடியாதபோதிலும்,இந்த இடத்தை  இந்து சமவெளி நாகரிகத்தை சார்ந்த சந்த்யான் (Chandayan)பகுதிக்கு அருகில் உள்ளதால் தேர்ந்தெடுத்தோம் என்றும் கூறியுள்ளார். எனினும் சிலர் இந்தப் பகுதில் உள்ள மண் சுரங்கம் பாண்டவர்கள் பயன்படுத்தியதாகயிருக்கலாம் எனக் கருதுகிறார்கள்.இதை படித்தபின் தங்களின் கற்பனையில்  வெண்முரசில் இந்த அரக்கு மாளிகையையும் மற்றும் சுரங்கத்தையும்  பற்றிய வருணனையைப் மீண்டும் ஆர்வமுடன் படித்தேன்(பிரயாகை – 46&47).இப்போதைக்கு இதன் வரலாற்று ஆதாரத்தை உறுதி செய்ய முடியாது என்பதை உறுதியுடன் ஏற்கும் நேரத்தில் இந்த அகழாய்வுக்கு அனுமதி வழங்கியதை மிக கொச்சையாக -தரம் தாழ்ந்து - கருத்துப்படமாகநேற்று வெளியிட்டிருக்கும் 'தி ஹிந்து' ஆங்கில நாளிதழை பற்றி என்னநினைக்கிறீர்கள்?.நீங்கள் ஏற்கனவே ஆங்கில ஹிந்துநாளிதழலின் தரத்தை பற்றி முன்பு இவ்வாறு நற்சான்று அளித்திருந்தீர்கள்...


2) http://www.thehindu.com/opinion/cartoon/cartoonscape-november-3-2017/article19969838.ece


அன்புடன்,

அ .சேஷகிரி.

அன்புள்ள சேஷகிரி

நம் மதநம்பிக்கையும் சார்புநிலையும் அறிவியல், வரலாற்று ஆய்வுகளை பாதிக்க அனுமதிக்கக் கூடாது

இந்தியாவில் மகாபாரத காலகட்டத்தைச் சேர்ந்த தொல்லியல் தடையங்கள் அனேகமாக ஏதும் இதுவரை கிடைத்ததில்லை. நமக்கிருப்பதெல்லாமே இலக்கிய ஆதாரங்கள் மட்டுமே

தொல்லியல்தடையங்களில் சுடுமண், கல் ஆகியவை மட்டுமே இத்தனை நீண்ட காலகட்டத்தை கடந்து வந்துசேரும். மரம் கூட நீடிக்காது

மகாபாரத காலம் இரும்புக்காலகட்டத்தின் தொடக்கம். அதாவது ஏறத்தாழ 3000 ஆண்டுக்கு முன்பு. அன்றிருந்த வெறும் மண்சுரங்கம் இத்தனைகாலம் நீடிக்குமா?

அன்றிருந்த ஒரு கட்டிடம், ஒரு கோட்டைகூட இன்றில்லை எனும்போது இது சாத்தியமா? அன்றிருந்த தொல்லியல் எச்சங்கள் இன்றிருந்தால் வெறும் அடித்தளங்களாக மட்டுமே எஞ்சும். அவற்றைத் தேடல்ாம் டிராய் நகர் கிடைத்தது எனும்போது மகாபாரத காலமும் துலங்கக்கூடும். ஆனல் இப்படி சுரங்கம் தேடுவதெல்லாம் வேடிக்கைதான்

இது தொல்லியலின் அடிப்படைகளுக்கே எதிரானது. ஒன்றுமே தெரியாமல் முட்டாள்தனமாக இதேபோல எதையாவது செய்வதென்பது நம்மிடம் உள்ளபடியே இருக்கும் பல மகத்துவங்களையும் கேலிக்குரியதாக ஆக்கிவிடும்

ஜெ