Tuesday, November 14, 2017

யுதிஷ்டிரரின் உள்ளிருக்கும் சூழ்ச்சித்திறம்



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

அறவோனாகிய யுதிஷ்டிரரின் உள்ளிருக்கும் சூழ்ச்சித்திறம் யௌதேயனிடம் வெளிப்படுகிறது.  உண்மையில் தன்னைப்பற்றி நன்கு புரிந்திருப்பதனாலேயே முற்றிலும் எதிர்திசையான அறத்தை அவர் முதன்மையாகக் கொண்டார் என்ற எண்ணம் தோன்றுகிறது.  மிகுந்த வன்முறையானது தன் மனம் என உணரும் ஒருவர் அகிம்சையை மிகவும் விரும்புவது போன்றது.  அச்சம் விளைவிக்கும் ஓர் இயல்பிடம் தப்ப அதன் நேர் எதிர் ஒன்றிடம் அடைக்கலம் பெறுவது.  உள்ளே நிறைவே அடையாத ஒரு பிச்சைக்காரன் இல்லாமல் ஓயாமல் வெறிகொண்டு பணம் சேர்த்துக்கொண்டே செல்லமுடியாது.  உள்ளே ஒரு திருப்தி கொள்ளும் செல்வந்தன் இல்லாமல் மகிழ்ச்சியுடன் பிச்சை எடுக்க முடியாது.  தீவிரமாக இருக்கும் எந்த ஒன்றிற்கும் அதன் எதிரிடையாக உள்ளே இருக்கும் ஒன்றுதான் என்று சொல்லிவிடமுடியுமா? "அதெல்லாம் எனக்குத் தெரியும்" என்று ஒரேடியாக சொல்லி அறியாமை மிகுந்தவர்கள் தான் படித்துகொண்டே இருக்க வேண்டும் தனக்கு அவ்வாறான அவசியமே இல்லை என்று மூடரும் சொல்லிக் கொள்ளமுடியும்.  "எல்லையில்லாத வீரம் இருப்பதால் மற்றவருக்கு சேதங்களைத் தவிர்க்க சண்டையே போடுவதில்லை" என்று கோழையான ஒருவர் சொல்ல முடியும்.  அவ்வாறு பொய்யில் வாழ்பவர்கள் உள்ளேயோ புறத்தேயோ எத்திசையிலும் தீவிரம் கொள்வதில்லை.  தீவிரம் இல்லாமல் அறிதலும் இல்லை.  இதில் கண்ணன் வழங்கும் ஒருமை எவ்வாறு செயல்படுகிறது? அவனும் தீவிரத்தையே வழங்குகிறான் என்று தோன்றுகிறது.  அவன்மீதான பற்று என்ற தீவிரத்தை அனைவர்க்கும் வழங்குகிறான்.  எதிலும் தீவிரம் இல்லாதவரை அவன் மீது தீவிரம் கொள்ளச் செய்கிறான்.  ஏதேனும் ஒன்றில் தீவிரம் கொண்டவர்க்கு அதை அனுமதித்து அதனினும் தீவிரமாக தன் மீதான பற்றை வழங்கி முதலாவதை அர்த்தம் இழக்கச் செய்கிறான்.  உள்ளும் புறமும் ஓடும் அகந்தையை மேல் நோக்கி ஈர்ப்பவன் போலும் அவன்.  பற்றிக்கொள்ள ஒன்றுமே இல்லாத இடம் நோக்கிக் இழுக்கிறான்.  பற்றுக பற்றற்றான் பற்றை என்பது இதுதான் போலும்.  அவன் எதையும் பற்றவில்லை, அவனைப் பற்றுவோர் பற்றுவதற்கு எதுவும் சிக்காமல் காணமால் போவர்.  அவன் போல் அவனாகவே ஆவர்.  அதுவரை தன்னை ஓர் பொருளென காட்டி கவனம் கவரும் திருடன் அவன்.                           

சுருதகீர்த்தி, சுதசோமன், யௌதேயன், சர்வதன் அரசியல் சூழ்ச்சி சார்ந்த பயணம் மேற்கொள்ள அபிமன்யுவையும் பிரலம்பனையும் ஆன்மிக சூழ்ச்சியாக துவாரகைக்குத் தருவிக்கிறான் கண்ணன்.   

மிகவும் சுவையாக சென்று கொண்டு இருக்கிறது எழுதழல்.             


அன்புடன்
விக்ரம்
கோவை