Sunday, December 31, 2017

சிறுதாய்க்குருவி



இனிய ஜெயம் ,

அசலை பீஷ்மரை , எங்கே எந்த ஆயுதம் கொண்டு தாக்க வேண்டுமோ அதை சரியாக செய்கிறாள் .

// “தன் குஞ்சுகளைக் காக்க சிறுதாய்க்குருவி கருநாகத்தை கொத்தி துரத்துவதை தாங்கள் கண்டிருக்கலாம். இது அன்னையரில் தெய்வங்கள் எழுந்தளிக்கும் ஆற்றல்” //

ஆம் அசலை ஒரு தாய்க்குருவிதான் . ஆனால் அந்த தாய்க்குருவியின் குஞ்சுதான் ,  அங்குள்ள குஞ்சுகளிலேயே மிக பாவமானது .

//மைந்தனை நினைக்கும்போது அவனை சிறுமகவாக கையிலேந்தி முலையூட்டிய நினைவுகளும், அவன் வந்து புன்னகைத்த கனவுகளும் கூடி எப்போதும் அவளை உளம் நெகிழச் செய்வதுண்டு. அவள் அந்நினைவுகளை தன்னைச் சூழ பரப்பி அதில் வாழ்ந்தாள். தன்னறையில் அவனுடைய இளமைக்கால ஆடைகளை வைத்திருந்தாள். அறைக்குள் அவற்றை வெவ்வேறு இடங்களில் பொருத்திவைத்து ஒவ்வொரு நாளும் அவனை ஒவ்வொரு அகவையில் உளம்பார்த்துக்கொண்டிருந்தாள். அவனைக் குறித்த தன் எண்ணங்களை ஒவ்வொரு நாளும் ஓலையில் எழுதி பேழையில் சேர்த்து வைப்பாள். பின்புலரியில் அவன் எப்போதும் அவள் கனவில் வந்தான்.
அவனுக்கு வெவ்வேறு மணங்கள் இருந்தன. கைக்குழந்தையாக இருக்கையில் அவன் வாயிலெழுந்த சற்றே புளித்த முலைப்பாலின் மணம். ஓடிவிளையாடுகையில் உலர்ந்த வியர்வையின் மணம். அவன் தலையிலெழும் எண்ணெயும் தாழம்பூவும் கலந்த நெடி. வளரும்போது அவன் உடல்மணம் மாறத்தொடங்கியது. உப்பு கலந்த மண் மணம். கசங்கிய தழை மணம். பின்னர் குருதியின் கிளர்ச்சியூட்டும் மணம். ஆண்புரவிகளிலும் களிறுகளிலும் அந்த மணத்தை அவள் அறிந்திருந்தாள். அன்று காலை எந்த மணத்தில் அவன் தன் கனவில் தோன்றுவான் என்பதை முந்தைய நாளிரவில் படபடப்புடன் எண்ணிக்கொள்வாள். அவள் எண்ணியதைக் கடந்து முற்றிலும் புதிய தோற்றத்திலேயே அவன் எப்போதும் இருந்தான்.//
அசலையின் நினைவில் எழும் துருமசேனன் இவன் .
//துருமசேனன் “அன்னையே, போர் வந்துகொண்டிருக்கிறது என்கிறார்களே. மெய்யாகவா?” என்றான். “எவர் சொன்னது?” என்றாள். “மூத்தவர் சொன்னார். ஆகவே நாங்களெல்லாம் முறையாக கதை பயிலவேண்டும் என்றார்.” அசலை “போர் வராது” என்றாள். துருமசேனன் “வரும்!” என்று உரக்க சொன்னான். “அதில் நாங்களெல்லாம் இறந்துபோவோம்.” அசலை நெஞ்சு உறைய சிலகணங்கள் நின்று பின் கடந்து “என்ன சொல்கிறாய், அறிவிலி?” என்றாள். “நிமித்திகர் பார்த்துவிட்டார்கள். எங்களிடம் செவிலி காந்திமதி வந்து சொன்னாள்” என்றான் துருமசேனன். “நான் போரில் இறப்பதற்கு முன் நூறுபேரை கொல்வேன்.” அசலை “அதெல்லாம் வெறும் செய்திகள். போர் நிகழப்போவதில்லை” என்றாள்.//
அசலையின் கண் முன் நிற்கும் துர்மசேனன் இவன் .
இந்த நாவலின் ரணவேதனை மிக்க பகுதியே இதுதான் . பிறக்க வேண்டும் ,வளரவேணும் ,அரசன் சொல்வான் ,அதன்படி ஆயுதம் பயில வேண்டும், போர் வருகிறது நீ செத்துப்போவாய் என ஒரு ஜோசியன் சொல்வான் ,செத்துப் போவதற்குள்  அவனுக்கு திருமணம் முடித்து ,எவள் வயிற்றிலேனும் அவனது வாரிசை உருவாக்கிவிடு என மூத்தோர் சொல்வர் .
நான் இறப்பதற்குள் நூறு பேரை கொல்வேன். துர்மசேனன்  அவனது குறுகிய வாழ்வுக்குள் அவனால் வகுத்துக்கொள்ள இயன்ற ஒரே இலக்கு .
நான் அசலையின் இடத்தில் இருந்தால் இவன் பொருட்டு நூறு முறை பீஷ்மரை கொல்வேன்.
அனைத்தையும் கடந்து விளக்க இயலா காதல்  ஒன்று கூடவே தொடருகிறது .
ஆம் துர்மசேனனுக்கு அசலை இடும் பெயர் கிருஷ்ணன்.