Saturday, January 20, 2018

குருதிச்சாரல் – கசப்பு


பிந்துமதியும், கரேணுமதியும் பேசுபவை, முன்னெடுத்து பரப்புபவை அவர்களில் தலைமுறை தோறும் கடத்தப்பட்டு வரும் கசப்பைத் தான். இதுவரை வந்த பகுதிகளான பாலைமகள் (தேவிகை), பெருநோன்பு (அசலை), மலைச்சுனையின் ஓசை (விஜயை), ஒளிர்பரல் (தாரை) ஆகியவற்றில் போரைத் தவிர்ப்பது என்பதே அப்பெண்களின் உளமாக இருந்தது. மாறாக பிந்துமதியும், கரேணுமதியும் போரை ஆதரிக்கிறார்கள். தாங்கள் மட்டுமே ஷத்ரியர்கள் என்ற உந்தலில் அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள் எனக் கொள்ளலாம். அது ஓரளவு உண்மையும் கூட. ஆனால் முழு உண்மை அல்ல.

பாண்டவர்களின் மனைவியரில் பலந்தரை, பிந்துமதி, கரேணுமதி மூவரும் கௌரவர்களுக்கு மணமகள்களாக சென்றிருக்க வேண்டியவர்கள். பாண்டவர்களால் கொள்ளப்பட்டனர். எனவே பிறந்தகம் முற்றிலும் அயலானவர்கள் இவர்கள். பாண்டவர்கள் கானேகுகையில் தேவிகையும், விஜயையும் தத்தமது பிறந்தகத்துச் செல்கின்றனர். சுபத்திரை நினைத்தால் துவாரகை செல்லக் கூடியவளாக இருந்தாள். ஆனால் இம்மூவருக்கும் அவ்வாய்ப்பு இருக்கவில்லை. எனவே தங்கள் அறைகளையே அவர்களது பிறந்தகங்களாக மாற்றி இருந்தனர். தாங்கள் நிற்க நிலம் இல்லை என்பவர்கள் கொள்ளும் பதட்டமும், வஞ்சமுமே இவர்களின் குரல். அதுவே இவர்களின் ஆளுமை. தாங்கள் சிறுமைப் படுத்தப்பட்டவர்கள் என்ற எண்ணமே அவர்களை தாங்கள் பிறரை விட மேம்பட்டவர்கள் என எண்ணச் செய்கின்றது. அதுவே நஞ்சாக வெளிவருகிறது. அழிவே அவர்களை விடுவிக்கக் கூடும்.

ஒருவகையில் இது கலிங்கக் குருதியின் சாபம் எனச் சொல்லலாம். வெண்முரசில் வரும் கலிங்க இளவரசியர்களில் துரியனின் மனைவி (துணைவி!!) சுதர்சனை மட்டுமே விரும்பியவனை அடைந்தவள். பிற அனைவருமே தங்கள் கொழுநன் மீது ஏதேனும் ஒரு கசப்புடனே தான் காலம் தள்ளியவர்கள். நீர்க்கோலத்தில் வரும் மாலினிதேவி முதல், சேதி நாட்டு தமகோஷரின் மனைவியரான சுனந்தை, சுனிதை, கர்ணனின் பட்டத்தரசியான சுப்ரியை வரை அனைவருமே தங்கள் ஷத்ரிய குருதி பாழ்பட்டதாகவே எண்ணியவர்கள். கசந்தே வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள். அவர்களின் நீட்சியே கலிங்கத்து அன்னையருக்குப் பிறந்த சேதியின் அரசியர். ஒருவகையில் பரிதாபத்துக்கு உரியவர்கள், இல்லையா?

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்