Friday, February 9, 2018

ராஜகோபாலன் கட்டுரை


இனிய ஜெயம் 

தொடர்ந்து வெண்முரசு சார்ந்த கலந்துரையாடல் கூடுகைகள்  நிகழ்ந்து,   ,நண்பர்  ஜா ஜா அவர்களின்  வெண்முரசு வாசிப்பு முறை  கட்டுரை அந்த இயக்கத்தில்  உயர்ந்து வந்தது . மிக மிக சந்தோசம் அளிக்கும் நிகழ்வு .  அக் கட்டுரைக்கான சுட்டி  எப்போதுமே வெண்முரசு அத்தியாயங்களின் இறுதியில்  இருக்கும் எனில்,  ஏதேனும் ஒரு நாள் பதிவின் வழியே வெண் முரசுக்குள் நுழையும் புதிய வாசகர் அனைவருக்கும் உதவியாக அமையும் .

விஷ்ணுபுரம் நாவலுக்கு ஒரு அறிமுக வாசகனாக நான் நுழையும் போது ,அந்த புனைவு கையாளும்  களங்களை உள்வாங்கிக் கொள்ள , அந்த நாவலை நான்கு முறை வாசித்து எனக்கே எனக்கான ஒரு சாவி நூலை உருவாக்கிக் கொண்டேன் .   அப்படி வெண்முரசுக்கு ஒரு சாவி நூல் உருவாகும் பட்சத்தில்  ஜா ஜா வின் இந்த பதிவு அந்த நூலின் முதல் பதிவாக இருக்க வேண்டும் .

அடுத்ததாக அக் கட்டுரையில் ஜா ஜா உருவாக்கி அளித்திருக்கும் சட்டகம்  வெண்முரசுக்கு மட்டுமானது அல்ல .  அந்த சட்டகத்தில் வைத்து விஷ்ணுபுரம் , போன்ற பிற நாவல்களையும் அணுக முடியும் .

அதற்கு அடுத்த நிலையில் தமிழின் எந்த நாவலையும் அந்த அறிதல் சட்டகத்திற்குள் வைத்து அணுகி  அறிய இயலும் .உதாரணமாக  புளியமரத்தின் கதை நாவலை எடுத்துக் கொள்வோம் . அது எந்த ஜானருக்குள் வருகிறது என அந்த சட்டகத்தை வைத்து அறுதி செய்து கொண்டு ,அந்த நாவல் அந்த ஜானருக்குள் நின்று , தொன்மக்கதைகளை , வரலாற்றை ,எப்படி அணுகுகிறது ,அந்த  ஜானருக்குள் அந்த நாவல் இந்த தொன்மம் ,வரலாறு இவற்றுக்கு இடையியலான கொடுக்கல் வாங்கல்களில் எந்த அளவு பயணித்திருக்கிறது என்பதை அறியலாம் .

பா வெங்கடேசனின்  தாண்டவராயன் கதை நாவலை எடுத்துக் கொண்டால் ,  அது பதினான்காம் லூயி இல் துவங்கி , கீழை தேச ,வரலாறு , மதம் ,   தொன்மம் காலம்   என   அனைத்தயும் கவிந்து வியாபித்து  கலைத்து ஊடறுத்து செல்லும் காதலை பின்தொடர்வது .  இடியாப்பம் எனும் உணவுப்பொருளின் வடிவத்தையே தனது வடிவமாகக் கொண்டது .   அந்த இடியாப்ப வடிவத்தை கூட இந்த அறிதல் சட்டகத்தை கொண்டு  உள்வாங்கிக்கொள்ள இயலும் .

ஆக ஜா ஜா  உருவாக்கி அளித்திருக்கும் இந்த அறிதல் சட்டகம் ,  இலக்கிய  வாசகர்  ,இலக்கிய ரசனை , கோட்பாட்டு விமர்சகர்,  அனைவருக்குமே முதன்மையான ஒரு அறிதல் சட்டகமாக விளங்க கூடியது .

கூடுகைகள் முடிந்து இரண்டு நாள் கழித்து ஜா ஜாவுக்கு நன்றி தெரிவித்து ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன் . என்ன இது வித்யாசம் ,நமக்குள்ள என்ன இதெல்லாம் புதுசா என கேட்டிருந்தார் .

 .நானறிந்தவரை கடலூரை சுற்றி உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் ,எது கல்வியோ அதை கற்றுத் தரும் ஆசிரியர்கள் என எவரும் இல்லை .தமிழ் நிலத்தின் எல்லா எல்லைகளிலும் இதே நிலைதான் என இதோ இன்று முப்பது லட்சம் லஞ்சம் வாங்கி ,களி திங்க சென்றிருக்கும் பல்கலை ஒன்றின் துணை வேந்தர் நிலை காட்டுகிறது .  எனது பள்ளி நாட்களில்  எங்கள் பள்ளியில் ராகவாச்சாரி எனும் ஆசிரியர் மூன்று ஆண்டுகள்  தலைமை ஆசிரியராக இருந்தார் . பள்ளி கல்விக்கு வெளியே , ஆண்டாள் ,பாரதியார் ,அரவிந்தர் ,விவேகாநந்தர், தமிழ் ஆங்கிலம் தவிர்த்து ஹிந்தி சமஸ்க்ருதம் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் என பலதை ,[சனிக்கிழமை பள்ளி அரை நாள் ] அரை நாள் சுண்டல் எல்லாம் வாங்கித் தந்து எங்களில் சிலருக்கு அறிமுகம் செய்தார் .   சார்பு நிலை கொண்ட வாதமாகவே இருக்கலாம் .இத்தகையதொரு அம்சம் , ஆசிரியத்துவம் என்பது எப்போதும் பிராமணர்கள் வசம் மட்டுமே  இருந்திருக்கிறது .இது சாதி எனும்  கீழான அம்சத்தில் வைத்தோ சாதிப்பெருமிதமாகவோ இதை சொல்லவில்லை . சிறு வயதில் பள்ளியில் புகு முக வகுப்பில் சேர்ந்தேன் . பாடலீஸ்வரர் கோவில் அருகேதான்  அருகே பள்ளி . ஜானகி டீச்சர் எங்களை கோவிலுக்கு அழைத்து சென்று ,தட்சிணா மூர்த்தி முன்னால்  நிறுத்தி வைத்து  முதல் ஸ்லோகமாக குரு பிரம்மா ஸ்லோகத்தை சொல்லி தந்தார் . ஆம் என் ஆசிரியர் எனக்கு கற்று தந்த முதல் கல்வி அதுவே . அன்று துவங்கி இன்று வரை அந்த ஸ்லோகத்தை சொல்லாமல் துவங்கிய  நாள் என ஒன்று எனது வாழ்வில் கிடையாது . உவகையில் ,மகிழ்ச்சியில் ,துயரில் ,பயத்தில் ,எதிர்பார்ப்பில் ,ஏமாற்றத்தில் , அவமானத்தில் , அடுத்தவனை சொல்லால் கொன்று மீண்ட குரூரத்தில் ,எல்லா கணங்களிலும் ,உள்ளே அந்த ஸ்லோகம் மீள மீள ஓதி இருக்கிறேன் . கல்வி என நான் அடைந்ததெல்லாம் ,அந்த ஸ்லோகம் வழி என்னை வந்து அடைந்தவையே  என்பது என்னை மகிழ்வூட்டும் எனது நம்பிக்கைகளில் ஒன்று .   பின்னர் கோவில் குறித்து வாசிக்கையில் கண்டது . பெயர் தட்சிணா மூர்த்தி . அமர்ந்த திசை தெற்கு .தொழில் ஆசிரியர் .குலம் பிராமணர் . 

யார் ஏற்றாலும் ஏற்றுக்கொள்ளா விட்டாலும்  யதார்த்தத்தில் .இலக்கிய வாசிப்பு என்பது ஒரு கல்வியே  . உலகே கூடி மறுத்தாலும் சரி ,ஒவ்வொரு இலக்கிய ஆளுமையும் ஆசிரியரே .  

அன்று ஜா ஜா வுக்கு எழுதினேன் . ஆசிரியர்களுக்கு  நன்றி என்ற ஒரு சொல்லை தெரிவிப்பதன்றி மாணவன்  வேறு என்ன செய்து விட முடியும் . 

கடலூர் சீனு